அரியலூர்: “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகம் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அது வழிவகுக்கும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டம் சன்னாவூரில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் திருமாவளவன் ஈடுபட்டதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருமாவளவன் இன்று (ஆக.5) நேரில் ஆஜரானார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராக சொல்லி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதனை நேரில் ஆஜராகி ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தேன். அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி அடுத்தடுத்த வாய்தாக்களில் பங்கேற்க நீதிபதி ஆணையிட்டு இருக்கிறார். இதுபோன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்கானவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். போதிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கேரள முதல்வரை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க இருக்கிறோம்.
தமிழக அரசு பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தப் போகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதி நெருக்கடிதான் இதற்கு காரணம் என்று தெரிய வருகிறது. பணி ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதால் புதிய இளைய தலைமுறைகளுக்கான வேலை வாய்ப்பு சிக்கலுக்கு உள்ளாகும். எனினும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர்க்க முடியாததாக நான் பார்க்கிறேன். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது. சமூக நீதி மற்றும் அனைத்து சமூககத்துக்கும் இடஒதுக்கீடு பரவலாக போய் சேர வேண்டும் என்கிற கருத்திலே யாரும் மாறுபடுவதற்கு வாய்ப்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகம் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை பெறுவதற்கு அது வழி வகுக்கும்.
அண்மையில் மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து அரியலூருக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது அவருக்குள்ள சுதந்திரம். தமிழகத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக சமூக விரோத சக்திகளால் வன்முறைகள் நடக்கின்றன.அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் தீவிரமான முறையில் சமூக விரோதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்ற சூழல்கள் எழுகின்ற போது மத்திய அரசு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.