சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக மாநகரில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் சென்னையின் பல்லாவரம் உள்பட சுற்றுவட்டார புறநகர்ப் பகுதிகளில் காலை 8 மணி தொடங்கி அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவு: சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. இதில், சென்னை புறநகர்ப் பகுதியான சோழிங்கநல்லூரில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அடையாறில் 10 செ.மீ, திருவொற்றியூரில் 9 செ.மீ., கொளத்தூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
பரவலாகப் பெய்த மழையால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்தில் சில சிரமம் ஏற்பட்டுள்ளது. அடையாறில் மரம் முறிந்து விழுந்த நிகழ்வு பதிவாகியுள்ளது. நகரின் ஒரு சில இடங்களில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பரவலாக மழை பெய்தாலும் கூட சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் இன்று (திங்கள்கிழமை) வழக்கம்போல் இயங்குகின்றன.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 6, 7-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8, 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.