சென்னை: கலங்கரை விளக்கம் – கொட்டிவாக்கம் இடையிலான கடற்கரை பாலம், திருவான்மியூர் – உத்தண்டி மேம்பாலம், மீனம்பாக்கம்- தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய சாலை, மேம்பாலத் திட்டங்கள் குறித்து, இன்று இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல். ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளை இணைக்கும் இணைப்புச் சாலை, ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் ‘யு’ வடிவ மேம்பாலப் பணி, பெருங்களத்தர் ரயில்வே மேம்பாலப்பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.
தொடர்ந்து சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட வேண்டிய தொலைநோக்கு திட்டங்களின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக, கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல்வழிப்பாலம், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை உயர்மட்டச் சாலை, பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சாலையில் ஐந்து சந்திப்புகளில் மேம்பாலம் அமைத்தல், பல்லாவரம் – சென்னை வெளிவட்டச்சாலையை இணைக்கும் உயர்மட்டச் சாலை, படப்பை – மணிமங்கலம் – வரதராஜபுரம் இடையிலான சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைத்தல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதவிர, நகர்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்துரர், ஓசூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முக்கியமான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை எல்லைச் சாலை: சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்கும் வகையில் மாநிலத்தின் தெற்குப் பகுதியிலிருந்தும், மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணுார் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு செல்லவும், சென்னையின் வணிக மற்றும் தொழில் வளத்தினை அதிகரிக்கும் வகையில் “சென்னை எல்லைச் சாலை திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
அதாவது, 133 கி.மீ நீளத்தில், 6 வழிச்சாலை, இருபுறமும் இருவழிச் சேவைச்சாலையுடன் நில எடுப்புக்கான தொகை உட்பட ரூ.16,212.40 கோடி மதிப்பில்சென்னை எல்லைச்சாலை அமைகிறது. இப்பணிகள் 5 கட்டங்களாக எண்ணுார் துறைமுகம் முதல், தச்சூர், திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதுர், சிங்கபெருமாள் கோவில் வழியாக மாமல்லபுரம் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை எல்லைச் சாலையின் முதல் கட்டப் பணிகள் எண்ணுார் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.40 கிமீ நீளத்துக்கு ரூ.4290 கோடியிலும், 2-ம் கட்டப்பணிகள் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 26.10 கிமீ நீளத்துக்கு ரூ.2259 கோடியிலும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து, இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார் . அப்போது, திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டம், கள ஆய்வில் அமைச்சர் எ.வ.வேலு. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், சென்னை எல்லைச் சாலைத் திட்டத்தின் இயக்குநர்சி.அ. .ராமன், திருவள்ளூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.