புதுடெல்லி: நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார்.
2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பங்கு தொடர்பான குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இந்த அறிவிப்பை மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களது (சீதாராமன்) சிந்தனையற்ற செயலால் மக்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை டேக் செய்த அவர், “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூலதன ஆதாய வரி உயர்வால் நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். எனவே, அந்த அறிவிப்பை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.