புதுடெல்லி: “பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், நிலைமை மோசம் அடைவதைத் தடுக்க, இஸ்ரேலை தண்டித்தாக வேண்டும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஈரான் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், நிலைமை மோசம் அடைவதை தடுக்க, இஸ்ரேலை தண்டித்தாக வேண்டும். மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட விரும்புகிறது. ஆனால், அது இஸ்ரேலின் சீயோன் ஆட்சியைத் தடுப்பதன் மூலமும், அவர்களை தண்டிப்பதன் மூலமும் மட்டுமே சாத்தியப்படும்” என்றார்.
மேலும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகம் தவறிவிட்டதாகவும், இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெஹ்ரானில் வசிக்கும் தூதர்கள் மற்றும் தூதரகத் தலைவர்களை திங்களன்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் ஆதரவுடன் செயல்படும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா, புவாட் ஷூகர் படுகொலையால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வான்வழி தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மற்றும் சி-டோம் அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் போர் விமானங்கள், ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை முறியடிக்க முடியும்.
அதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின் ‘ஆபிரகாம் லிங்கன்’, ‘தியோடர் ரூஸ்வெல்ட்’ உள்ளிட்ட போர்க் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் முகாமிட்டு உள்ளன. அமெரிக்க விமானப் படை சார்பில் கூடுதல் போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி மைக்கேல் குரில்லா தலைமையிலான உயர்நிலை குழு இஸ்ரேலில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.