கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் தாஜ்பூர் பகுதியில் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கடைகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதற்கு கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்எல்ஏவும் மாநில சிறைத் துறை அமைச்சருமான அகில் கிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த 3-ம் தேதி தாஜ்பூர் பகுதிக்கு சென்ற அமைச்சர் கிரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த வனத்துறை பெண் அதிகாரி மணீஷாவை அநாகரிகமாக மிரட்டினார்.
“நீங்கள் ஓர் அரசு ஊழியர். அமைச்சரிடம் பேசும்போது தலைகுனிந்து பேச வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் உங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய வழியில் குறுக்கிடக்கூடாது. மீறினால் அடித்து விரட்டுவேன். இரவில் நீங்கள் வீட்டுக்கு செல்ல முடியாது” என்று மிரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தன.
இந்த சூழலில் அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அமைச்சர் அகில் கிரிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டது. இதன்படி அவர் நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து திரிணமூல் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “முதல்வர் மம்தாவின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் கிரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறைத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்” என்று தெரிவித்தன.