போபால்: மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக பழமையான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. ரேவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுவர் இடிந்து விழுந்ததில், பள்ளிக்கு சென்று திரும்பிய 5 முதல் 7 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சோகம் மறைவதற்குள், சாகர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில் நேற்று மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள ஹர்தால் பாபா கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில், சிறிய அளவிலான சிவலிங்கங்களை உருவாக்கி வழிபடுவது வழக்கம். இதற்காக சிவலிங்கங்கள் உருவாக்கும் பணி கோயில் அருகே நடந்து வந்தது. தன்னார்வத்துடன் பலரும் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பெற்றோரின் அனுமதியுடன் உள்ளூரை சேர்ந்த 10-15 வயது சிறுவர்கள் சிலரும் நேற்று இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறுவர்கள் வரிசையாக அமர்ந்து சிவலிங்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே உள்ள வீட்டின் சுவர் திடீரென இடிந்து, சிறுவர்கள் மீது விழுந்தது. அருகே இருந்தவர்களும், போலீஸார் விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளில் சிக்கி 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயம் அடைந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் ஷாபூரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவர் இடிந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
தலைவர்கள் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு இந்த வேதனையை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அளிக்க வேண்டும். காயம் அடைந்த சிறுவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார். சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந்த சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். மாநில முதல்வர் மோகன் யாதவ் வெளியிட்ட செய்தியில், ‘இந்த சோக சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு எனது இரங்கல்கள். அவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம், மாநில அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டில் மழையால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளால் அங்கு இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. சுமார் 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளன.