டாக்கா: மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் கனபாபன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் திரிபுரா வழியாக புதுடெல்லி நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் புதுடெல்லி வந்து பின்னர் அங்கிருந்து லண்டன் செல்லலாம் அல்லது புதுடெல்லியிலேயே தங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சாணக்யபுரியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கான பாதுகாப்பை டெல்லி காவல்துறை பலப்படுத்தியுள்ளது. தூதரகத்துக்கு வெளியே அதிக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வலியுறுத்தல்: வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வரும் நிலையில், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நஹிட் இஸ்லாம், ஹசீனாவின் ராஜினாமாவை மட்டும் நாங்கள் கோரவில்லை. மாறாக பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வங்கதேசத்தில் ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்க வேண்டும். புதிய ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாக, அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் வீதிகளை விட்டு வெளியேற மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.