திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற பெண் வசித்து வந்தார். 30-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து தூக்கத்திலிருந்து விழித்த அவர், தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (விம்ஸ்) தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தீயணைப்புத் துறையை தொடர்புகொண்ட விம்ஸ் நிர்வாகத்தினர் மீட்புக் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதான் நிலச்சரிவு தொடர்பாக மீட்புக் குழுவுக்கு கிடைத்த முதல் தகவல் என கூறப்படுகிறது.
எனினும், சூரல்மலையில் நிலச்சரிவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்காங்கே மரங்கள் சாலையில் சாய்திருந்தன. மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மீட்புக் குழுவினரால் விரைவாக செல்ல முடியவில்லை. இதற்கு நடுவே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புக்குழுவினர் அங்கு செல்வதற்குள் நீது மண்ணில் புதைந்துள்ளார். அவருடைய உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரியான விம்ஸில் செயல் அதிகாரியாக நீது பணியாற்றி வந்துள்ளார். இதில் பணிபுரிந்த மேலும் 3 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து விம்ஸ் ஊழியர் ஒருவர் கூறும்போது, “நீது செல்போனில் தொடர்புகொண்டு, நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்தார். யாராவது வந்து எங்களை காப்பாற்றுங்கள் என அபாயக் குரல் எழுப்பினார்” என்றார்.
நீதுவுடன் கணவர் ஜோஜோ, 5 வயது மகன், பெற்றோர் வசித்து வந்துள்ளனர். அவர்களும் பக்கத்தில் வசித்தவர்களும் அருகில் உள்ள மலை மீது செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு 2-வது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களுடைய வீட்டின் ஒருபகுதி மண்ணில் புதைந்துள்ளது. எனினும், ஜோஜோ, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மலை மீது ஏறிச் சென்றுள்ளனர். ஆனால், நீது மட்டும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளார். நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த நீது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.