சென்னை: வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து துப்பு துலக்கினர்.
முதல் கட்டமாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க போலீஸாரின் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர், கொலைக்கான காரணம் என்ன என்பது மட்டும் இதுவரை வெளியாகவில்லை.
போலீஸ் பாதுகாப்பு இந்நிலையில், அயனாவரத்தில் ஒன்றரை வயது மகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மலர் கொடிக்கு கடிதம் வாயிலாக மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அக்கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி விடுவதுடன், குடும்பத்தினர் அனைவரையும் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக சதீஷ் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை அழைத்து வந்து செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.