இஸ்ரேலுக்கு எதிராக இரானும், ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை (இன்று) முதல் தாக்குதலை தொடங்கலாம் என ஜி7 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இரானில் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பின்னனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டிய நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் இரான், இஸ்ரேல் மீது எதிர்த்தாக்குதலுக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஃபுஆத் ஷுக்ர் இஸ்ரேல் ராணுவத்தால் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. ஆனால், அந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான டோம் மூலம் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அதே நேரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவியை வழங்கியது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது.
இந்த நிலையில்தான், போர் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைக்காக ஜி7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூட்டினார்.
அதில், “அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீதான இரானிய தாக்குதல் தொடங்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.” என எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், இஸ்ரேல் மீதான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், அதில் இஸ்ரேலின் முன்னணி உளவுத்துறை நிறுவனங்களான மொசாட் தலைவர்கள் டேவிட் பர்னியா, ஷின் பெட் தலைவர் ரோனென் பார், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், ஐடிஎஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில், இஸ்ரேல் மீது நடத்தப்படவிருக்கும் தாக்குதலைத் தடுக்க, இரான் மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்த அனுமதிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு தூதரகங்கள் தங்கள் குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்துகின்றன.