பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வியை அடைந்திருக்கிறார்.
பேட்மிண்டனில் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி, பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களெல்லாம் சீக்கிரமே வெளியேற சர்ப்ரைஸாக லக்சயா சென் கலக்கியிருந்தார். இந்த ஒலிம்பிக்ஸில் தொடக்கத்திலிருந்தே லக்சயா சிறப்பாக ஆடியிருந்தார். ஒரு போட்டியில் வலுவான இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார். காலிறுதிப்போட்டியில் அனுபவமிக்க சீன தைபே வீரர் சௌக்கு எதிராக முதல் செட்டை இழந்தும் மீண்டு வந்து அடுத்த இரண்டு செட்களில் அசத்தியிருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் கடுமையான போராட்டக் குணத்தை வெளிக்காட்டியிருந்தார்.
அரையிறுதியில் மட்டும்தான் கையிலிருந்த ஆட்டத்தைக் கோட்டைவிட்டிருந்தார். டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரரான விக்டர் ஆக்சல்சனுக்கு எதிராக வீழ்ந்திருந்தார். முதல் செட் அவர் கையில்தான் இருந்தது. 20 – 17 என முன்னிலையில் இருந்தார். அப்படியொரு வலுவான நிலையிலிருந்து அந்த செட்டை இழந்தார். இரண்டாவது செட்டின் ஆரம்பத்திலும் அற்புதமாக ஆடினார். தொடக்கத்திலேயே 7-0 என முன்னிலை எடுத்தார். ஆனால், அதையும் லக்சயா சென்னால் தக்கவைக்க முடியவில்லை. அப்படியொரு நிலையிலிருந்து அந்த செட்டையும் இழந்து போட்டியை இழந்தார். துரதிஷ்டவசமான தோல்வி அது!
இந்நிலையில் இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த லீ ஜி ஜியாவுக்கு எதிராகக் களமிறங்கினார். முதல் செட்டிலேயே தனது வலுவான ஸ்மாஷ்கள் மூலம் அற்புதமாக முன்னிலையைப் பெற்று 21-13 என வென்றார். இரண்டாவது செட்டிலும் நல்ல முன்னிலையைப் பெற்றிருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 8 புள்ளிகளுக்கு மேல் மலேசிய வீரர் எடுக்க, அந்த செட் கடினமானது. இந்த மொமண்டமைப் பயன்படுத்திக் கொண்ட லீ அந்த செட்டை 21-16 என வென்றார். அடுத்த செட்டிலும் மலேசிய வீரரின் ஆதிக்கமே தொடர்ந்தது. இந்த செட்டில் ஆரம்பத்திலிருந்தே 8 புள்ளிகள் முன்னிலையில் லீ ஆடிக்கொண்டிருந்தார்.
லக்சயா சென்னின் வலது கையில் வேறு காயம் இருந்தது. அதனாலும் அவர் அவதிப்பட்டுக் கொண்டே இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட லீ தொடர்ந்து அட்டாக்கிங்காக ஆடி 21 – 11 என அந்த செட்டையும் வென்றார். லக்சயா சென் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
லக்சயா சென் இளம் வீரர். 22 வயதே ஆகிறது. இப்போதே ஒலிம்பிக்ஸில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் எட்டாத உயரத்தை எட்டியிருக்கிறார். அவருக்கான காலம் இன்னும் இருக்கிறது. இன்னும் 2 – 3 ஒலிம்பிக்ஸ்களில் அவரால் ஆட முடியும். ஆக, அவர் இந்தத் தோல்வியிலிருந்து சீக்கிரமே மீண்டு வர வேண்டும்.