விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி கோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ கடந்த வாரம் (ஆகஸ்ட் 2ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அப்படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 1 நிமிடக் காட்சியால் படத்தின் கதையோட்டம் கெடுவதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் அந்தக் காட்சியை யார் வைத்தது எனக் கேள்விகேட்டு படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் காணொலி ஒன்றை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது.
மேலும், “படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன். ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதைச் சொல்லிவிட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி எனத் தெரியவில்லை” என்று விஜய் மில்டன் தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தின் தொடர்ச்சி என்ற சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இன்று இதற்குப் பதிலளித்த நடிகர் விஜய் ஆண்டனி, “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என்று விளக்கம் அளித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து தற்போது இயக்குநர் விஜய் மில்டன், “உங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி விஜய் ஆண்டனி சார். நம் இருவருக்குமிடையே பரஸ்பரமான நல்ல நட்பு இருக்கிறது. அது நாம் இருவரும் படத்தின் மீது வைத்த அர்ப்பணிப்பால் உருவான நட்பு. தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை நடிகர் சரத்குமார் அவர்கள் தலையீட்டால் தீர்க்கப்பட்டு இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு ‘Toofan’ வெளியாகிறது. அதை முன்னோக்கியப் பயணத்தை தொடர்வோம். குரல் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுகிறார்.
விஜய் ஆண்டனியும், “அறிமுகக் காட்சி குறித்து தயாரிப்பாளரும், இயக்குநரும் கலந்து பேசிவிட்டனர்; இன்று முதல் அந்தக் காட்சிகள் நீக்கப்படும் என முடிவுக்கு வந்து விட்டனர். இந்தப் பிரச்னை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்; படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.