திமுக மீது தொடர்ந்து வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு `குடும்ப அரசியல் செய்கிறது’ என்பதுதான். திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது மகனும் அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவியை வழங்கினார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் திமுக-வின் தலைவரானார். அவரே ஒருமுறை தனது மகனும், மருமகனும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில் உதயநிதி அரசியலில் என்ட்ரி கொடுக்க, சும்மா கிடந்த எதிர்க்கட்சியின் வாய்களுக்கெல்லாம் அவல் கொடுத்ததுபோல திமுகவை மென்று தீர்த்துவிட்டார்கள். விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதேபோல, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு கொடுத்து எம் .எல்.ஏ-வும் ஆனார். அதோடு புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையிலும் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.
அமைச்சரவையில் உதயநிதி!
இருந்தபோதிலும் முதலாவதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் ஆவடி நாசர் வெளியேற்றப்பட்டு சில அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றப்பட்டிருந்தது. அதேசமயத்தில் உதயநிதி புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்தார். அமைச்சராக அறிவித்ததிலிருந்து உதயநிதிக்குக் கட்சியில் ஏறுமுகமே. கட்சி பணிகளைத் தாண்டி அரசுப் பணிகளிலும் உதயநிதி முன்னிறுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த பேச்சு ஒன்று கட்சிக்குள் பெரிதாக எழுந்தது.
அது உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி என்பதுதான். நடந்து முடிந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படப் போகிறது என்ற பேச்சு மிகப் பெரிய அளவில் எழுந்தது. கட்சியின் சீனியர்கள் பலரும் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கையை முன்வைத்தார்கள். பேச்சு பெரியளவில் எழுந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, “அமைச்சர்கள் அனைவருமே முதல்வருக்குத் துணையாக இருக்கிறோம்” என்று சொல்லி சென்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி என்ற பேச்சு மிகப்பெரிய அளவில் எழுந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்பாக துணை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது. இதற்கிடையில், அன்பகத்தில் நடைபெற்ற இளைஞரணி நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “துணை முதல்வர் குறித்துப் பல செய்திகள் வருகின்றன. ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருக்கிறோம். நான் எங்குச் சென்றாலும் இளைஞரணி செயலாளர் பதவிதான் எனக்கு நெருக்கமானது” என்று பேசியிருந்தார்.
உதயநிதி பேசியது ஒருபுறமிருக்க, அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க குடும்பத்தில் பெரும் விவாதம் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் உதயநிதி துணை முதல்வராகும் கோரிக்கை வலுத்திருக்கிறது என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால், பழுக்கவில்லை” என்று பதிலளித்திருந்தார். இதனால் மூலம், உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
என்ன நடக்கிறது தி.மு.க-வில்?
உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி தரவேண்டும் என திமுகவில் கோரிக்கை வலுப்பதாகச் சொல்லும் நிலையில் இன்னும் பழுக்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். “தேர்தலுக்கு முன்பாகவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கவேண்டும் என்று பேச்சு எழுந்தது. இதுகுறித்து கட்சியிலும், முதல் குடும்பத்திலும் பெரிதாகப் பேசப்பட்டது என்னவோ உண்மைதான். தேர்தல் முடியட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முதல்வர் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே அனைவரும் துணையாக இருக்கிறோம் என்று உதயநிதி பேசியது. இப்போது மீண்டும் அதே கோரிக்கையை எழுந்ததும், அதனை பூதாகரப்படுத்தியதும் குறிஞ்சி இல்ல வட்டாரங்கள்தான். உதயநிதிக்குப் பொறுப்பு வழங்குவது குறித்து முதன்மை குடும்பத்தில் இதுவரை இரண்டு முறை பெரியளவில் விவாதம் நடந்திருக்கிறது. இப்போது பொறுப்பு வழங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து முதல்வர் கட்சி சீனியர்கள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர்கள் தங்களின் கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள்.
அதேசமயத்தில் உதயநிதி தரப்பு ஆள்கள் முதல்வர் தரப்பிடம் துணை முதல்வர் கொடுப்பது சரியாக இருக்கும். அமைச்சர்களை முதல்வரிடத்திலும், அதிகாரிகளைத் துணை முதல்வரிடத்திலும் ரிப்போர்ட் செய்யச் சொல்லலாம். முதல்வரின் பணி எளிமையடையும் என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட முதல்வர் இதுவரை துணை முதல்வர் பொறுப்பு வழங்குவது குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை. அதனால்தான் பலமுனைகளிலிருந்து கோரிக்கை வருவதை வலுத்திருக்கிறது… முடிவெடுக்கப்படவில்லை என்பதைப் பழுக்கவில்லை என்று மேலோட்டமாக சொல்லியிருக்கிறார். இதில் முடிவு இறுதி செய்யப்படாததினால் அமைச்சரவையில் இருக்கும் சிறிய மாற்றமும் இதுவரை செய்யப்படாமல் இருக்கிறது.” என்றார்கள் விரிவாக..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88