கேள்விக்குறியாகும் வங்கதேசத்தின் எதிர்காலம்

உலக அரசியல் – பல விசித்திரங்களை பல விபரீதங்களைக் கண்டுள்ளது. இதன் சமீபத்திய அத்தியாயம் – வங்கதேச விவகாரம். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்கதேச ராணுவம், இடைக்கால அரசை நிறுவும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான்அறிவித்துள்ளார்.

இவை எல்லாமே உள்நாட்டுப் பிரச்சினைகள்; இந்தியா உட்பட எந்த நாடும் இதில் தலையிட முடியாது.

1996 – 2001 வரை, பிறகு 2009-ல் இருந்து நேற்று வரை தொடர்ந்து 15 ஆண்டுகள், பிரதமர் பதவி வகித்த ஷேக் ஹசீனா அந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிக நிச்சயமாக முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில்தான் பொதுத் தேர்தல் நடந்து, ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது; ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சர்வதேச செய்தி நிறுவனங்கள் உட்பட, அநேகமாக எல்லாருமே, பொதுத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாகவே கூறினர். ஆனால் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சி, பொதுத் தேர்தலைப் புறக்கணித்தது.



இந்தக் குறுகிய காலத்தில் என்ன நடந்தது? 1971-ல் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30% ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 1972-ல் இருந்தே இது நடைமுறையில் இருந்தாலும், 2018-ல் விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இதனை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; இது, ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்டது என்று கருதினர். தகுதி, தரத்தின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவாமி லீக் கட்சியினரின் அலுவலகங்கள், வீடுகள் தாக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. நாட்டின் உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. 30% ஆக இருந்த இருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இளைஞர்களின் போராட்டத்தை தணித்து விடவில்லை.

மானவர்கள் மீண்டும் போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கையை, இளைஞர்களின் போராட்டத்தை, அலட்சியப்படுத்தினார் பிரதமர் ஹசீனா. ராணுவம் காவல் துறை கட்சித் தொண்டர்களின் உதவியுடன் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார். கடந்த ஞாயிறு நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இத்தனை கலவரங்களுக்கு மத்தியில், ‘வங்கத் தந்தை’ என்று நம்மால் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (ஷேக் ஹசீனாவின் தந்தை) சிலையை கலவரக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளனர். அந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது நம் மனம் துடித்தது. காலம் எத்தனை கொடுமையானது…!

53 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொல்வதானால் 1971 மார்ச் 7 அன்று, டாக்கா ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், லட்சக்கணக்கில் திரண்டு இருந்த மக்கள் முன்பு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றினார். “இது நமது முன்னேற்றத்துக்கான போராட்டம்; நம் நாட்டு விடுதலைக்கான போராட்டம். ஒவ்வொரு வீடும் ஒரு கோட்டையாக மாற வேண்டும்” என்று முழங்கினார். இந்த உரையை, 2017 அக் 30 அன்று, ஐ. நா. வின் யுனெஸ்கோ அமைப்பு, தனது பாரம்பரிய நினைவு பதிவேட்டில் ஏற்றுக் கொண்டு மரியாதை செய்தது.

“இன்று வங்கதேசத்தில் எழும் குரல், விடுதலைக்கான குரல்; உயிர் வாழ்வதற்கான குரல்; நமது உரிமைகளுக்கான குரல்” என்று உரக்கப் பேசிய அந்தக் குரலுக்கு உரியவர்.. பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி கண்டவர்… அந்த நாட்டு மக்களாலே அவமானப் படுத்தப்படுகிறார்!

மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை – தற்போதைய போராட்டம் – டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. இதே… டாக்கா பல்கலைக் கழக வளாகம் 1971 மார்ச் 25, 26 ஆகிய இரு நாட்களும், மனித குலம் கண்டிராத படு கோரமான, இரக்கம் அற்ற இனப் படுகொலையைச் சந்தித்தது. பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற பேராசிரியர்கள் ஃபஜிலுர் ரஹ்மான், அன்வர் பாஷா, ரஷிதுல் ஹசன், அப்துல் முக்தாதிர், கான் காதிம், ஷரஃபத் அலி, உளவியல் பேராசிரியர் டாக்டர் கோவிந்த சந்திர தேவ் உள்ளிட்டோர், 1971 மார்ச் 26 அதிகாலை, பல்கலைக்கழக வளாகத்திலேயே, பாகிஸ்தான் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் .இந்த கோர நிகழ்வை, ‘டாக்கா பல்கலைக்கழக படுகொலை’ என்றே சரித்திரம் பதிவு செய்கிறது.

சீனாவில் நடந்த தினானமென் சதுக்கப் படுகொலை (1989), இலங்கையில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலை (2009) போன்றே, டாக்கா பல்கலைக்கழக படுகொலையும் மனித குல வரலாற்றில் நிரந்தரக் கரும்புள்ளியாய் இருந்து வருகிறது. இது குறித்து இன்றைய வங்கதேச இளைஞர்கள் ஒருகணம் சிந்தித்துப் பார்த்து இருந்தால், முஜிபுர் சிலையை சேதப்படுத்தத் துணிந்திருக்க மாட்டார்கள்.

அங்கே எழுந்துள்ள இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் சரியா, தவறா என்று இப்போதே கணித்துச் சொல்ல முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்தே இதன் நல்ல, அல்லது மோசமான, விளைவுகள் குறித்துத் தெரிய வரும். எது எப்படி இருப்பினும், அண்டை நாடான வங்கதேசம், ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்றே தோன்றுகிறது.

இது, அந்த நாட்டுக்கும் நமக்கும் உலகத்துக்குமே கூட, நல்ல செய்தி அல்ல. விரைவில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்; அங்குள்ள தலைவர்கள், ராணுவம், நீதிமன்றங்கள், மக்கள், எல்லாரும் இணைந்து செயல்பட்டு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். இப்போதைக்கு நம்மால் கூற முடிந்தது ஒன்றுதான் – அமைதி திரும்பட்டும்; நல்லது நடக்கட்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.