சென்னை: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை சென்னையில் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து 20 நாட்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.
சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய, சென்னை போக்குவரத்து போலீஸார், யூ திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ‘ஜீரோ இஸ் குட்’ (ZERO IS GOOD) என்ற பெயரில் சென்னை முழுவதும் நூதன விளம்பரம் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
அதாவது விதிமீறல், அபராதம், விபத்து, விபத்து உயிரிழப்பு என அனைத்தும் ஜீரோவானால் விபத்துகள் இன்றி விபத்து மரணங்கள் ஜீரோவாகி விடும் என்பதை மையமாக வைத்து இதுபோன்ற விழிப்புணர்வை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளைக் குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘விபத்தில்லா தினம்’ (ZERO ACCIDENT DAY) என்ற பெயரில் மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை இன்று முதல் தொடங்கி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் 26-ம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது. வரும் நாட்களில் பள்ளி, கல்லூரி, ஐ.டி ஊழியர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் போக்குவரத்து போலீஸார் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். முதல் கட்டமாக, விபத்தில்லா தின விழிப்புணர்வு திட்டத்தை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் பேருந்து பணிமனையில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வைத்தார். அப்போது, 20 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தை ஏற்படுத்தாமல் அரசுப் பேருந்துகளை இயக்கிய 5 ஓட்டுநர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
பின்னர், அவர் கூறியதாவது: “முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை போக்குவரத்து காவல்துறை ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை தொடங்கி உள்ளது. உலகத்தில் எல்லா மாநகரங்களிலும் தினமும் சிறிய விபத்தாவது நடைபெறும். ஆனால், சென்னையை முன் மாதிரியாக கொண்டு வர ஒரு நாளாவது விபத்து இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக வரும் 26-ம் தேதி ஜீரோ ஆக்சிடென்ட் டே கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம் விபத்து, விபத்து உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருக்க இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் இருக்கலாம். ஆனால், இது ஒரு முயற்சி. இது வெற்றி பெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து நாட்களும் விபத்தில்லா நாட்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அப்படி விபத்து இல்லாத நாளாக மாற்ற அனைத்து வாகன ஓட்டிகளும் மற்றும் சாலைப் பயணிகளும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.