சென்னை: தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.9-ம் தேதி பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்த நிலையில், அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. முன்னதாக, அதிமுக ஆட்சியில் இருந்த போதே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது. இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் மக்களவை தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும், தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் கட்சியினருக்கு பழனிசாமி அறிவுறுத்தினார். இதற்கிடையில், ஆளும் திமுக வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான குழுவை அமைத்து, அக்குழுவும் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், கொளத்தூர் தொகுதியில், பாக முகவர்களையும் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அடுத்த கட்டபணிகள் குறித்து விவாதித்துள்ளார். மேலும், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளிலும் திமுக இறங்கியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, அதிமுகவிலும் நிர்வாகிகளை உத்வேகப்படுத்தும் முயற்சியில் பழனிசாமி இறங்கியுள்ளார்.
மேலும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் ஜூன், ஜூலையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகுவது, தேவையான குழுக்களை அமைப்பது, சசிகலா, ஓபிஎஸ் குறித்த விஷயங்களை விவாதிப்பது ஆகியவற்றுக்காக வரும் ஆக.9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.