சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 22-ம் தேதி திட்டமிடப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தை வரும் 2030-ம்ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள அவர், அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமானமுதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டது. கடந்த ஜூலை மாதம் செல்ல முடிவெடுத்த நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த மாதத்துக்கு பயணம் மாற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், வரும் 22-ம் தேதி முதல் 15 நாள் பயணத்துக்கு அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, வரும் ஆக.22-ம் தேதி முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. அப்போது அவர், கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக வம்சாவளியினரையும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, முதல்வரின் பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் வரும் ஆக. 22-ம்தேதிக்கு பதிலாக 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.