வங்கதேச விவகாரம் | மக்களவையில் விளக்கமளிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: வங்கதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், அதற்காக இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பெலாரஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.



இதற்கிடையே, இந்தியாவில் ஹசீனா தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், வங்கதேச சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இந்திய பாதுகாப்புத்துறையின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார்.

பின்னர் வங்கதேச விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ராகுல் காந்தி, டிஆர் பாலு உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் தான், வங்கதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.