டாக்கா,
வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சூழலில், இன்றும் அந்நாட்டின் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் வெளியேறினார். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் இன்று புகுந்தனர். அவர்களில் சிலர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஒரு சிலர் மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். ஒரு சிலர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களை வீடியோ எடுத்தனர்.
நாடாளுமன்றத்தின் உள்ளே கூடியிருந்தவர்களில் சிலர் எதனையோ எரித்ததில், அந்த பகுதி முழுவதும் புகை பரவி பல அடி உயரத்திற்கு சென்றது. சிலர் கைத்தட்டியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும், மேஜை மீது நடந்து சென்றும், குதித்தபடியும் காணப்பட்டனர்.