புதுடெல்லி,
வங்காள தேசம் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
இந்தியா – வங்காள தேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 ம் தேதி, ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
மிக குறுகிய நேரத்தில், அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி கோரினார். வங்காள தேச அதிகாரிகளிடமிருந்தும் விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது. வங்காள தேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் அவருக்கு இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை அவர் டெல்லி வந்தார்.
வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. வங்காள தேசத்தில் நடந்த கலவரத்தின்போது சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடு முழுவதும் தனி நபர்களின் சொத்துக்கள் தீக்கரையாக்கப்பட்டன.
தூதரகம் மூலமாக வங்காள தேசத்தில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19,000 இந்தியர்கள் அங்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் கடந்த ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர். சிறுபான்மையினரின் நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த இந்திய தூதரங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு வெளிநாட்டு சதி இருக்கலாம். கடந்த 24 மணி நேரமாக வங்காள தேச அரசுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளது. வங்காள தேசத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அண்டை நாட்டில் நிலவும் போராட்டத்தை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறு எல்லை பாதுகாப்புப்படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.