பீஜிங்,
சீனாவின் வடகிழக்கே லையானிங் மாகாணத்தில் வசித்து வரும் 38 வயது நபர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சமீபத்தில் தலையில் ரத்த கசிவு பாதிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதன்பின் நிலைமை மோசமடைந்ததும், ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார். இதனால், அவருடைய மனைவியை தொடர்பு கொள்ள மருத்துவ பணியாளர்கள் முயன்றனர். ஆனால், அவசர வேலையாக வெளியே சென்ற அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சீனாவில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்டர்கள் அதுபற்றி நோயாளியின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். நோயாளியால் முடிவு எதுவும் செய்ய முடியாத சூழலில், அதில் உள்ள ஆபத்துகள் பற்றி குடும்பத்தினரிடம் விளக்கி, எழுத்துப்பூர்வ ஒப்புதலும் பெற வேண்டும்.
சிகிச்சைக்கு குடும்பத்தினர் மறுத்து விட்டால், அவர்களின் ஒப்புதல் இன்றி தேவையான நடவடிக்கைகளை மருத்துவமனை தலைவர் மேற்கொள்ள முடியும். இந்த விவகாரத்தில், அந்த நபரின் மனைவியை கண்டறிய முடியவில்லை. அப்போது, 2-வது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
அவர், நோயாளியின் மனைவி என அடையாளப்படுத்தி கொண்டார். இதன்பின் டாக்டர் சென் அவரிடம் சென்று, நெருக்கடியான நிலைமையை பற்றி விரிவாக கூறியுள்ளார். அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் பிழைப்பதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது என கூறியுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தற்காலிக அளவிலேயே அவரை பாதுகாக்கும். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அதற்கான செலவும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பெண், அந்த நபரின் முதல் மனைவியாவார்.
ஆனால், அவரை விட்டு விட்டு வேலைக்காரியான மற்றொரு பெண்ணுடன் இந்த நபர் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்படவே, அவரை அந்த பெண் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இந்நிலையில், டாக்டரிடம் அந்த மனைவி, என்னுடைய கணவர் 10 ஆண்டுகளாகவே எனக்கு உண்மையற்றவராக இருக்கிறார் என எனக்கு நன்றாக தெரியும். என் மீது அவருக்கு எந்த அன்பும் இல்லை. எந்தவித பண உதவியும் செய்யவில்லை. சில காலங்களாக, அவர் மீது தனக்கும் அன்பு இல்லை என தெரிவித்து இருக்கிறார்.
ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடவும் மறுத்து விட்டார். கணவருக்கு சுவாச குழாய் வழியே அளித்து வரும் சிகிச்சையை நீக்கி விடும்படியும் கூறி விட்டார். அவரை காப்பாற்றுவதற்கான எந்தவித முயற்சியையும் கைவிடும்படியும் கூறியிருக்கிறார்.
இதனால், மரண படுக்கையில் இருந்த கணவரை காப்பாற்றும் முயற்சிக்கு உதவ, அந்த பெண் எந்தவிதத்திலும் முன்வரவில்லை. இந்த மனைவியின் நடவடிக்கை சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவியது.
இதுபற்றி ஒருவர் வெளியிட்ட பதிவில், உண்மையற்ற இந்த மனிதர் நெருக்கடியான நிலையில் இருக்கிறார். அறுவை சிகிச்சையும் அவரை காப்பாற்றுவது கடினம். இதுவே கர்ம வினை என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மற்றொருவர், வயது முதிர்வு வரை உங்களுடைய மனைவி உறுதுணையாக வருபவர். அவரை நன்றாக கவனித்து கொள்வது என்பது உங்களை நன்றாக கவனிப்பது ஆகும் என தெரிவித்து இருக்கிறார்.