இந்திய ராணுவத்திற்காக இந்தூர் ஐஐடி சிறப்பு ஷூ வை தயாரித்துள்ளது. இந்திய இராணுவம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.: உலகில் உள்ள எந்த ராணுவத்துடன் ஒப்பிட்டாலும், இந்திய ராணுவம் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்திய ராணுவத்தின் பராக்ரமத்தை பார்த்து எதிரிகள் நடுங்குகிறார்கள்.
இந்திய ராணுவ வீரர்கள் அதிநவீன கேஜெட்கள் பொருத்தப்பட்ட இராணுவத்தினரையும் எதிர்கொள்ளும் திறமையையும், அனைத்து தடைகளையும் சமாளிப்பதில் வல்லவர்கள் என்றும் பெயர் வாங்கியவர்கள். தற்போது இந்திய வீரர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேக காலணி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி இந்தூர் புத்தாக்கம்
அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட புதிய ஷூ, பல வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த காலணிகளை ஐஐடி இந்தூர் தயாரித்துள்ளது. காலணிகளை அணிந்து கொண்டு ராணுவ வீரர்கள் நடக்கும்போது அவர்களின் ஒவ்வொரு அடியிலும் மின்சாரம் உற்பத்தியாகும் வகையில் இந்த காலணி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute of Technology (IIT)), இராணுவ வீரர்களுக்கான சிறப்பு காலணிகளை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயார் செய்துள்ளது. இந்த காலணிகளை அணிந்து நடப்பதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அது மட்டுமின்றி ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தையும் சரியாக அறிந்து கொள்ளவும் இந்த சிறப்பு ஷூ உதவும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலணிகளில் 10 ஜோடி காலணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (DRDO) அனுப்பியுள்ளதாக ஐஐடி இந்தூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தூர் ஐஐடியின் பேராசிரியர் ஐ.ஏ.பழனி தலைமையில் இந்த சிறப்பு காலணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.
மின்சாரம் தயாரிக்க, இந்த காலணிகளை தயாரிப்பதில் சிறப்பு ட்ரிபோ-எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (TENG) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ட்ரிபோ-எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
மின்சார சேமிப்பு
ஷூ தயாரிக்கும் மின்சாரமானது, காலணிகளின் உட்புறத்தில் பொருத்தப்பட்ட கேட்ஜெட்டில் சேமிக்கப்படும். இப்படி சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், இராணுவ வீரர்கள் தங்கள் சிறிய சாதனங்களை சார்ஜ் செய்துக் கொள்ளவும், இயக்கவும் முடியும்.
ஜிபிஎஸ் & ஆர்எஃப்ஐடி
‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ (Global Positioning System) மற்றும் ‘ரேடியோ ஃப்ரீக்வென்சி ஐடென்டிஃபிகேஷன்’ (Radio Frequency Identification technologies) தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட காலணிகளின் உதவியுடன், ராணுவ வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும் என்பதும் இந்த காலணிகளை மேலும் சிறப்பு வாயந்தவைகளாக மாற்றுகின்றன.
இந்த காலணிகளின் புதுமையான அம்சங்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை பலப்படுத்தும் என்று ஐஐடி இந்தூர் இயக்குனரும் பேராசிரியருமான சுஹாஸ் ஜோஷி கூறினார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பு காலணிகள்
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், மலையேறுபவர்கள் ஆகியோரின் இருப்பிடத்தைக் கண்டறிய, டெங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட காலணிகளையும் பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, இந்த காலணிகள் தொழிலாளர்களின் வருகை மற்றும் தொழிற்சாலைகளில் அவர்களின் பணியை கண்காணிக்க உதவியாக இருக்கும்.
இந்த காலணிகளின் உதவியுடன், வீரர்களின் கால் அசைவுகளை துல்லியமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம், அவர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.