பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இந்த நிலையில், பிரிட்டனின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த முகன்வா ருடகுபனா (17) என்ற சிறுவன், கடந்த மாத இறுதியில் டெய்லர் ஸ்விஃப்ட் தீம் நடன வகுப்பில் இருந்த 10 சிறுமிகளை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக அந்த சிறுவன் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பிரிட்டனைச் சேர்ந்தவரல்ல என்றும் பல பொய்த் தகவல்கள் வதந்திகளாக வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, வலதுசாரி ஆதரவாளர்கள், அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்கள்மீதும், பள்ளிவாசல்கள்மீதும் தாக்குதல் நடத்தினர்.
பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பிட்ட சமூக மக்களின் வணிகவளாகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை மீதும் தக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 375-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “தவறான பொய்த் தகவல்களால் தூண்டப்பட்ட தீவிர வலதுசாரி குண்டர்கள் நடத்திய தாக்குதலில், பல அகதிகள் முகாம்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான உந்துதல் எதுவாக இருந்தாலும், அவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் எதிர்ப்பல்ல. இது தூய வன்முறை அரங்கேற்றம்.
பள்ளிவாசல்கள், முஸ்லிம் சமூக மக்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கலவரங்களைச் சமாளிக்க சிறப்பு காவல்துறையின் நிலையான ராணுவம் ஒருங்கிணைக்கப்படும். நாடு முழுவதும் வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றியவர்கள் மீதான நடவடிக்கைக்கு நீதி அமைப்பு துரிதப்படுத்தப்படும். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொருவரும் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்படுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பெல்ஃபாஸ்ட் நீதிமன்றத்தின் துணை மாவட்ட நீதிபதி லியாம் மெக்ஸ்டே, “வணிக நிறுவனங்களை குறிவைத்து பல்பொருள் அங்காடிக்கு தீ வைத்த கலவரக்காரர்களில், அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. அப்படி வழங்கப்பட்டால் மீண்டும் மீண்டும் இதுபோல செயல்படுபவர்களுக்கு அது தைரியம் கொடுத்தது போலாகும். தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் முற்றிலும் அவமானகரமானவை.
இந்த சம்பவங்கள் பொது ஒழுங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாகவே தெரிகிறது. இதில் இனவெறி கூறுகள் இருக்கிறது. இனி எந்த காரணத்திற்காகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அதன் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்க நேரிடும்.” என எச்சரித்திருக்கிறார்.
அமைச்சர்கள் மற்றும் உயர் சட்ட அமலாக்க அதிகாரிகளின் சந்திப்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “ தீவிர வலதுசாரிகளால் வன்முறையைத் தூண்டும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. சில தவறான தகவல்கள் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ளன.” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.