பெங்களூரு: கர்நாடகாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் புகைப்படத்தை கோயிலின் கருவறைக்குள் வைத்து பூஜை செய்த அர்ச்சகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் ஜாமீன் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தொட்டா பசவேஸ்வரா கோயில் அர்ச்சகர் மல்லிகார்ஜூன சுவாமி தர்ஷனின் புகைப்படத்தை கடவுள்களுடன் கருவறையில் வைத்து பூஜை செய்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோமேஸ்வரா என்ற பக்தர் கூறுகையில், “இந்த கோயிலுக்கு நீண்ட வரலாறும் பெருமையும் இருக்கிறது. அர்ச்சர் மல்லிகார்ஜூன சுவாமியின் செயலால் கோயிலுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கொலை வழக்கில் கைதான குற்றவாளியை கடவுளுக்கு இணையாக கருவறையில் வைத்ததை ஏற்க முடியாது. பக்தர்களின் மனங்களை புண்படுத்திய அர்ச்சகர் மல்லிகார்ஜூன சுவாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையடுத்து இந்து அறநிலையத்துறை, அர்ச்சகர் மல்லிகார்ஜூன சுவாமியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.