கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக.9) கோவை வருகிறார். அன்றைய தினம் உக்கடம்-ஆத்துப்பாலம் புதிய மேம்பாலம் மற்றும் பல்வேறு அரசு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக.9) காலை 11 மணிக்கு கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை மாநில அளவில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இவ்விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து 12.30 மணியளவில் கணியூரில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். 12.45 மணியளவில் புறப்பட்டு 1 மணியளவில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.