சென்னை: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவர்கள் மீதான வழக்கை மீண்டும் முதலில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதேபோல, கடந்த திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ.44.57 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2023 ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
இவ்வாறு 2 அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ‘பொதுவாக பெரிய மீன்கள் வலையில் சிக்குவது இல்லை’ என்கிற ஜேம்ஸ் ஜெப்ரி ரோச் என்கிற மேலைநாட்டு கவிஞரின் கவிதை வரியுடன் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளேன்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் தந்துவிட கூடாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் குற்ற வழக்குகளில் இருந்து அரசியல்வாதிகளை காப்பாற்றும் நோக்கில் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 173(8)-ஐ போலீஸார் தவறுதலாக பயன்படுத்துகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிற மாநில அரசியல்வாதிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் இரும்புக் கரத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. நீதி பரிபாலனத்தை யாரும் கையில் எடுத்துக்கொண்டு செயல்படாதபடி விசாரணை நீதிமன்றங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவர் மீதான வழக்குகளையும் நீர்த்துப்போகச் செய்ய, ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இந்த வழக்குகள் சிறந்த உதாரணம். அந்த அளவுக்கு 2 வழக்குகளிலும் அச்சு பிசகாமல் ஒரேமாதிரியாக திட்டமிட்டு, இறுதி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றமும் அதை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு, அவர்களை விடுவித்துள்ளது.
முதலில் இந்த வழக்கை விசாரி்த்த புலன் விசாரணை அதிகாரி, அவர்களது பண பரிமாற்றம், சொத்து விவரம், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சான்றுகளுடன் குற்றச்சாட்டை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 2-வது புலன் விசாரணை அதிகாரி மூலமாக அந்த இறுதி அறிக்கை அப்படியே தலைகீழாக மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
எனவே, சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான 2 வழக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். இதற்காக, லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த வழக்குகளை முடித்து வைத்து தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை கூடுதல் இறுதி அறிக்கைகளாக கருதி மறுவிசாரணை நடத்த வேண்டும்.
இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி 2 அமைச்சர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணைக்காக சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செப்டம்பர் 9-ம் தேதியும், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் செப்டம்பர் 11-ம் தேதியும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இந்த 2 வழக்குகளையும் தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்திமுடிக்க வேண்டும். வழக்குக்காக ஆஜராகும் 2 அமைச்சர்களுக்கும் ஜாமீன்வழங்க வேண்டும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை வில்லிபுத்தூர் நீதிமன்றம் கருத்தில் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.