தமிழக சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5000 கோடி ஒதுக்கீடு: மாநிலங்களவையில் அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: தமிழகத்தின் சாலைத் திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5,000 கோடி வழங்கப்பட உள்ளது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையின் திமுக எம்.பியான ராஜேஷ்குமார் கேள்வி நேரத்தில் பேசுகையில், “2023 மற்றும் 2024 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.657.53 கோடி இது தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி இல்லை. எனவே, தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூ.2000 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. இரண்டாயிரம் கோடி அல்ல, ரூ.5000 கோடியை கூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே இதுகுறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரையையும் , நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மேற்கொள்ளும்.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.