டெல்லியில் 9-ம் வகுப்பு மாணவன், தனது தோழியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காகவும், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் ஐபோன் வாங்கித் தருவதற்காகவும் வீட்டில் தனது அம்மாவின் தங்க நகைகளைத் திருடி விற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட சிறுவனின் தாயார், தனது வீட்டிலிருந்த நகைகளை யாரோ திருடிவிட்டதாக ஆகஸ்ட் மூன்றாம் தேதி போலீஸில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் புகார்தாரரின் வீட்டிலிருந்து ஜோடி தங்க கம்மல் மற்றும் ஒரு தங்க மோதிரம் களவாடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதையடுத்து, போலீஸார் இதில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர், புகார்தாரரின் வீடு, சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை போலீஸார் ஆய்வுசெய்தபோதும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. பிறகுதான், புகார்தாரரின் குடும்பத்தினர் மீது போலீஸாருக்கு கவனம் திரும்பியது. மேலும், இந்த சம்பவம் நடந்த நாள்முதல் புகார்தாரரின் மகன் காணாமல் போனதைப் போலீஸார் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, அந்த சிறுவனின் நண்பர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
இறுதியில், ரூ.50,000 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோனை சிறுவன் வாங்கியிருக்கிறார் என்பதையறிந்த விசாரணை அதிகாரிகள், தரம்புரா, கக்ரோலா, நஜாப்கர் ஆகிய இடங்களில் பல சோதனைகளை நடத்தியும் சிறுவன் கிடைக்கவில்லை. பின்னர், செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் தனது வீட்டுக்கு சிறுவன் வருவான் என்ற தகவல் பெற்ற போலீஸார், காத்திருந்து 6:15 மணியளவில் சிறுவனைப் பிடித்தனர். பிறகு விசாரணையில், வீட்டில் நகைகளைத் திருடியதையும் சிறுவன் ஒப்புக்கொண்டான்.
இது குறித்து பேசிய, துவாரகா துணை போலீஸ் கமிஷனர் அங்கித் சிங், “தேடலின் போது, சிறுவனிடமிருந்த ஆப்பிள் ஐபோன் மீட்கப்பட்டது. அதையடுத்து சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, முதலில் இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லை மறுத்தார். பின்னர், திருடப்பட்ட தங்க நகைகளைப் பொற்கொல்லரிடம் விற்றதாக சிறுவன் ஒப்புக்கொண்டான். அதன்படி, கமல் வர்மா (40) என்ற பொற்கொல்லர் அவரது கடையிலேயே கைதுசெய்யப்பட்டார்.
மேலும் விசாரித்தபோது, நஜாப்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தான் 9-ம் வகுப்பு படிதாகக் கூறிய சிறுவன், தன்னுடைய தந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், படிப்பில் தனக்கு சரியாக ஆர்வமில்லாததால் சராசரியான மதிப்பெண்களைப் பெறுவதாகவும் தெரிவித்தார். அதோடு, தன்னுடைய தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க சிறுவன் தன்னுடைய தாயிடம் பணம் கேட்டிருக்கிறான். ஆனால், படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி சிறுவனின் தாய் பணம் கொடுக்க மறுத்திருக்கிறார். அதனால், சிறுவன் தனது வீட்டில் திருட முடிவெடுத்திருக்கிறான். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88