“பரஸ்பர பிரிவுக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை'' – தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய மும்பை ஹைகோர்ட்

திருமணமாகி ஓர் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக் கோரிய தம்பதிக்கு, 6 மாத காத்திருப்புக் காலத்தை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கிறது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். விவாகரத்து, கோர்ட்டால் முடிவு செய்யப்படுகிறது. சில தம்பதிகள், பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்வார்கள். ஆனால், திருமணமாகி ஓரிரு ஆண்டில் மனமொத்து பிரிந்துவிடுவார்கள். இது போன்ற சம்பவங்களை நாம் அதிகம் பார்த்து வருகிறோம். சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் தனது விவாகரத்தை தனது நண்பர்களை அழைத்து அமெரிக்காவில் மிகப்பெரிய பார்ட்டி வைத்துக் கொண்டாடினார். இந்தக் காலச்சூழலில் தான், ஒரு வழக்கில் காத்திருப்பு காலத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கியிருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம்.

புனேயை சேர்ந்த 29 மற்றும் 28 வயது தம்பதிக்கு 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் நல்ல வேலையில் இருக்கின்றனர். ஆனால், திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து, இருவரும் தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரையும் சேர்த்துவைக்க குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இறுதியில், மனமொத்து இருவரும் பிரிந்துவிடுவது என்று முடிவு செய்து புனே குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். தாங்கள் விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதால் 13 B(2) சட்டப்பிரிவை பயன்படுத்தி, காத்திருப்பு காலத்தை ரத்து செய்து, தங்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த குடும்ப நல நீதிமன்றம், ’20 மாதங்களாக தனியாக வசிக்கிறீர்கள் என்பதற்காக காத்திருப்பு காலத்தை ரத்து செய்ய முடியாது; என்று கூறி, விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்கும்படி கூறிவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கெளரி கோட்சே, தம்பதியிடம் தனிப்பட்ட முறையில் பேசிப்பார்த்தார். அவர்கள் என்ன காரணத்திற்காக பிரிகின்றனர் என்ற விவரங்களை கேட்டுக்கொண்டவர், ’தங்களது காத்திருப்புக் காலத்தை ஏன் ரத்து செய்யவேண்டும் என்று அவர்கள் கூறியது ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. எனவே 13 B(2) சட்டப்பிரிவின் அடிப்படையில் தம்பதி 6 மாதம் காத்திருக்காமல் உடனே விவாகரத்து வழங்கப்படுகிறது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து, தனித்து வாழும் முடிவு

’பொதுவாக, விவாகரத்து வழக்கில் கணவர், மனைவி என்று எந்தத் தரப்புக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், மீண்டும் இருவரும் சேர்வதற்கான வாய்ப்பை அவர்கள் தவறவிடக்கூடாது என்பதற்காகவும்தான் விவாகரத்து கேட்கும் தம்பதி 6 – 18 மாதங்கள் வரை காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், மாறிவரும் சமூக நிலைமைகளை மனதில் கொண்டு நீதித்துறை யதார்த்தமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். பரஸ்பர சம்மதத்தின் மூலம் தம்பதி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யும் போது, ​​அவர்கள் பிரிந்து செல்வதற்கான ஓர் உறுதியான முடிவை எடுத்துள்ளனர் என்றே எண்ண முடிகிறது. அது, அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது. மறுவாழ்வுக்கான எல்லா வாய்ப்புகளும் அவர்களுக்கு உள்ளன.

மனுதாரர்கள் இருவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களால் இனி சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்துதான் பிரிவது என்று முடிவு செய்துள்ளனர். எனவே, மேற்கொண்டு காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள் மனவேதனையைப் போக்கும் விதமாகவும் மனுதாரர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.