போக்குவரத்து கழகங்களுக்காக ராஜஸ்தானில் தயாராகும் புதிய தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக ராஜஸ்தானில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வரும் புதிய தாழ்தளப் பேருந்துகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 7,682 பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக சென்னை மாநகரபோக்குவரத்து கழக பணிமனையில் ரூ.66.15 கோடி மதிப்பில் 100 பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர் நேற்று பார்வையிட்டு, அதன் சிறப்பம்சங்களை ஆய்வு செய்தார்.

அதன்படி தாழ்தளப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகள், தானியங்கி கதவுகள், எல்இடி திரை, ஒலி பெருக்கி, குஷன் இருக்கைகள், பேருந்து நிறுத்தங்களின்போது ஏறி, இறங்க ஏதுவாக சாய்தளம், அகலமான ஜன்னல்கள், சென்சாருடன் கூடிய தீயணைப்பு இயந்திரம் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பயணிகளின் இடவசதியை அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஓட்டுநர்களுக்கான நவீன சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஓட்டுநர்கேபின், ரியர்வியூ கேமரா, மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் இருக்கை, தனி மின்விசிறி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவையும் இதில்இடம்பெற்றுள்ளன. இவற்றை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், தயாரிப்பு நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து கட்டுமானப் பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.