மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது இன்று (ஆகஸ்ட் 7) காலை முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம் தேதி எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர், அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்றிரவு நீர்வரத்து விநாடிக்கு 22,200 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 4,500 கன அடி என மொத்தம் 22,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு இன்று காலை 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணைக்கான நீர்வரத்து சரிந்ததன் காரணமாக, கடந்த 8 நாட்களுக்கு பிறகு, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டது.
டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக இன்று காலை 5 மணி வரை, 21,500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதல் 21,500 கனஅடியில் இருந்து 16,000 கன அடியாகவும், பின்னர், காலை 8 மணி முதல் 16 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாகவும் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.