புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல், இண்டிகோ சிறப்பு விமானம் ஒன்று டாக்காவில் இருந்து இந்தியர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தது.
வங்கதேசத்தில் இன்னமும் நிலைமை பதற்றம் நிறைந்ததாக இருப்பதால் அந்நாட்டு மக்கள் பலர் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடி அருகே குவிந்துள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரியும் அத்தியாவசியமற்ற ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேச தந்தை என்று அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்ட தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை அந்நாடு தேசிய துக்க தினமாக அனுசரிப்பது வழக்கம். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய துக்க தின அனுசரிப்பை ஒத்திவைக்க டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கொல்கத்தாவில் இருக்கும் வங்கதேச மக்கள் தங்கள் நாட்டில் நடந்து வரும் வன்முறை குறித்து கவலையடைந்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ கொல்கத்தா வந்த வங்கதேசத்தவர்கள் பலரும் தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளனர். தங்கள் நாட்டில் நடந்து வரும் வன்முறை மற்றும் திடீர் ஆட்சி மாற்றம் குறித்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பது அவர்களின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகமது முஸ்டாக், “நான் என் தந்தையின் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்துள்ளேன். நாங்கள் கடந்த 20 நாட்களாக இங்கு இருக்கிறோம். டாக்காவில் உள்ள எனது குடும்பத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.