தெஹ்ரான்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் குடிமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது.
இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரானின் தெஹ்ரான் நகரில் நடந்த ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
வீட்டில் வைத்து நடந்த தாக்குதலில், அவருடைய பாதுகாவலரும் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் சபதமேற்றது.
இந்நிலையில், ஹனியேவின் படுகொலை மற்றும் பிற விசயங்களை பற்றி விவாதிப்பதற்காக, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின், மந்திரிகளுக்கான செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், ஈரானின் வெளியுறவு மந்திரி பொறுப்பு வகிக்கும் அலி பாகேரி கனி கலந்து கொண்டார்.
அவர் இந்த கூட்டத்தில் பேசும்போது, ஹமாஸ் அமைப்பு தலைவரின் படுகொலை, இஸ்ரேலின் பயங்கரவாத குற்றங்களில் ஒன்று. ஈரானின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் மேற்கொள்ளப்பட்ட வலுகட்டாய தாக்குதல் ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேலை இந்த விதிமீறல்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும். இதற்கு பொறுப்பானவர்களை விசாரணைக்கு கொண்டு வந்து, தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த கொடூர குற்றத்தில், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டிய நாடாக உள்ளது. அதனை நாம் மறந்து விட்டு சென்று விட முடியாது.
அமெரிக்காவின் அனுமதியின்றி, அவர்களுடைய உளவு துறையின் ஆதரவின்றி இந்த அத்துமீறிய தாக்குதல் சாத்தியமில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முறையான நடவடிக்கை இல்லையென்றால், இஸ்ரேலின் அத்துமீறலை எதிர்கொள்ள, சுயபாதுகாப்பை சட்டரீதியாக பயன்படுத்துவது தவிர ஈரானுக்கு வேறு வழியெதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.