வயநாடு: வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவப்படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக அயராது ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட முண்டக்கை- சூரல்மலை பகுதிகள் இடையே இந்திய ராணுவத்தினர், 190 அடி நீளமுள்ள பெய்லி இரும்புப்பாலம் அமைத்துக் கொடுத்து பேரிடரில் சிக்கிதவிக்கும் மக்களை மீட்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினரைத் திருப்பிஅனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் முகமது ரியாஸ் கூறியதாவது: ஓர் உடல் ஓர் உயிர் போல் இத்தனை நாட்கள் இணைந்து செயல்பட்ட நம் ராணுவத்தினரை வழியனுப்பி வைப்பது வேதனைஅளிக்கிறது. துயரத்திலிருந்து நம்மை மீட்க வந்த ராணுவப்படையினருக்கு பிரியாவிடை கொடுப்பதென்பது உணர்ச்சி மிக்க தருணமாக மாறியுள்ளது. அவர்களோ தங்களது கடமையை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டனர். தங்களது வருகைக்கு பிறகு இனியொரு உயிரிழப்பு நிகழாதபடி பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கென மேலும் பல பொறுப்புகள் இருக்கவே செய்கிறது. ஆகையால் அவர்கள் நமக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்து விடைகொடுப்போம்.
இவ்வாறு கூறிய அமைச்சர் ரியாஸ், ராணுவ அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து பேசிய ராணுவ வீரர் ஒருவர் கூறும்போது,‘‘ நாங்கள் இங்கிருந்து சென்றாலும் எங்கள் இதயங்களை கேரள மக்கள் குறிப்பாக வயநாடு, மேப்பாடி மக்களிடமே விட்டுச் செல்கிறோம். அமைச்சர்கள், உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறையினர் அவசர உதவி சேவை பிரிவினர் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்’’ என்றார்.