புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
ஒருநாள் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில்,
“இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி வெல்ல தகுதியான ஒரு அணி என்று நினைக்கிறேன். இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை இழந்திருப்பதை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் ஒரு அங்கம்தான். ஆனால் எனது கவலை எல்லாம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நினைத்துதான். ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.