கொழும்பு,
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. ரோகித் சர்மா தவிர இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் சோபிக்க தவறினர்.
இந்நிலையில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயரை விட ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சுழலுக்கு எதிராக பல மடங்கு சிறந்த வீரர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக சூர்யகுமார் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை சிறப்பாக அடிப்பார் என்று பாசித் அலி கூறியுள்ளார். எனவே அவர்களை இந்தத் தொடரில் தேர்ந்தெடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “எனக்குத் தெரிந்ததை இந்த தொடர் காண்பித்துள்ளது. உண்மையில் சுப்மன் கில்லை விட ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள். ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்காமல் தேர்வுக் குழுவினர் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அதேபோல சூர்யகுமாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி இன்னும் 6 மாதங்களில் வர உள்ள நிலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு 3 போட்டி மட்டுமே உள்ளது. அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் ஜெய்ஸ்வால் அனைத்து வகையிலும் கில்லை விட சிறந்தவர். அதேபோல ஸ்பின்னர்களுக்கு எதிராக சூர்யகுமார் 1000 மடங்கு சிறந்தவர். குறிப்பாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் நீங்கள் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அதிகம் அடிக்க வேண்டும். அந்தத் திறமையைக் கொண்டுள்ள சூர்யகுமார் எளிதாக ஸ்பின்னர்களை எதிர்கொண்டு இத்தொடரை இந்தியாவுக்கு வென்று கொடுத்திருப்பார். ஜெய்ஸ்வாலும் ஸ்பின்னர்களை நன்றாக அடிக்கக் கூடியவர்” என்று கூறினார்.