“நான் எப்போ வருவேன்… எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்” என்கிற டயலாக்கிற்கு ஏற்ப, திடீரென சினிமா இன்டஸ்ட்ரிக்குள் நடிகராக என்ட்ரி ஆகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார், ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணராவ்.
’மாம்பழத் திருடி’ படத்தில் நடித்து ‘ஹவ் இஸ் திஸ்’ (ரஜினியின் ஃபேமஸ் டயலாக்) சொல்லவைத்திருக்கிறார். இந்த நிலையில் சத்ய நாராயண ராவ்வை தொடர்புகொண்டு பேசினேன்…
“எத்தனையோ இயக்குநர்கள் என்னை நடிக்கக் கேட்டிருக்காங்க. பல ரெக்கமெண்டேஷன்களோடும் வந்து நடிக்கக் கூப்ட்டிருக்காங்க. ஆனா, எனக்கு அப்போல்லாம் விருப்பம் இல்லாம இருந்தேன். ‘மாம்பழத் திருடி’ பட இயக்குநர், அவரோட அப்பா-அம்மாவோடு வீட்டுக்கு வந்துட்டாரு. என்னால தவிர்க்கமுடியல.
இயக்குநர் என்கிட்ட கதை சொன்ன விதமும் ரொம்ப பிடிச்சிருந்தது. எனக்கு நடிப்புங்குறது புதுசு. ஆனா, ஷூட்டிங்குல நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா பேசினதா சொன்னாங்க. பெங்களூருல இருக்கிற எங்க தோட்டத்துக்கே வந்து ஷூட் பண்ணாங்க. எனக்கு கெஸ்ட் ரோல்தான், ஆனா ரொம்ப முக்கியமான கேரக்டர். என் வயசுக்குத் தகுந்தமாதிரியான கேரக்டர். ஆனா, இந்த ஒரு படம் மட்டும்தான். இனிமே நடிக்கமாட்டேன்.
‘மாம்பழத் திருடி’ பட பிரஸ் மீட்ல இயக்குநர் ரசீம் என்னை ரொம்ப புகழ்ந்திருக்காரு. ஏன் அப்படி புகழ்ந்தார்ன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நானும் எல்லோரும்போல சாதாரண மனிதன் தான்” என்று தன்னடக்கத்தோடு கூறியவரிடம், ”நீங்கள் படத்தில் நடித்தது குறித்து உங்கள் தம்பி ரஜினி சார் என்ன சொன்னாரு?” என்று கேட்டபோது, “இப்போவரைக்கும் நான் சினிமாவுல நடிக்கிறேன் என்பதே தம்பிக்கு தெரியாது. நான், அவர்க்கிட்ட எதையும் சொல்லிக்கல. ஆனா, தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார். அடிக்கடி தம்பிக்கிட்ட பேசுவேன். அவரும் அடிக்கடி போன் பண்ணி பேசுவார். குடும்ப ஃபங்ஷன்களிலும் கலந்துக்குவோம். ஆனா, சினிமாவுல நடிக்கிறது பற்றி எதுவுமே சொல்லல” என்பவரிடம் “ரஜினி சார்க்கிட்ட ஒரு அண்ணனா பிடிச்ச விஷயங்கள் என்ன? அவரோட படங்களில் உங்களின் ஃபேவரைட் படம்னா எது?” என்று கேட்டேன்.
அதற்கு, “தம்பி ரஜினிக்கிட்ட பிடிச்சதே அவர் கொடுக்கிற மரியாதைதான். சின்ன வயசுல அண்ணா… அண்ணான்னு அன்பா கூப்பிட்டது இப்போவரைக்கும் அந்த வார்த்தை மாறல. சூப்பர் ஸ்டார் ஆகியும் என் மேல இருக்கிற அன்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கு. பழசை மறக்காதவர் ரஜினி. என்னிடம் மட்டுமில்ல, எல்லார்க்கிட்டேயுமே அப்படித்தான் நடந்துக்குவார். அன்பு, கருணை, பாசம், நேசம்னு அவர் மாதிரியான மனசு யாருக்கும் வராது. அப்படிப்பட்ட மகாமனிதன் எங்க குடும்பத்துல பிறந்தது, எங்களுக்கு பெரிய பாக்கியம். தம்பியோட படத்துல ரொம்ப பிடிச்சதுன்னா ‘அண்ணாமலை’தான். அதற்கடுத்து, ‘படையப்பா’. உழைச்சா எல்லோரும் முன்னேறலாம்ங்குற உத்வேகத்தை கொடுக்கிற படங்கள். அதனால, ரொம்ப பிடிக்கும்”என்கிறார், சினிமாவில் இத்தனை வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சத்ய நாராயண ராவ்.