ஆக்லாந்து: நியூசிலாந்தின் வளர்ச்சியில் இங்குள்ள இந்தியர்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
நியூசிலாந்து பயணத்தின் நிறைவு நாளில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆக்லாந்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்காக நியூசிலாந்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆக்லாந்து வந்திருந்த இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், “நியூசிலாந்தின் வளர்ச்சியிலும் வளத்திலும் நீங்கள் முக்கியப் பங்காற்றி வருகிறீர்கள். வணிகம் முதல் கல்வி வரை, சுகாதாரம் முதல் தொழில்நுட்பம் வரை உங்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது.
இந்திய சமூகத்தின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றல் பாராட்டுக்குரியவை. இந்த மதிப்புகள் பல தலைமுறைகளாக நம்மை வழிநடத்தி வருகின்றன. எதிர்காலத்திலும் அவை நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்நிலைப் பயணங்கள், பிரதிநிதிகளின் பரிமாற்றங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்க பங்களித்துள்ளன. நியூசிலாந்து அரசும், மக்களும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வரவேற்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டு இந்திய சமூகம் வளம் பெற உதவுகின்றனர்.
ஆக்லாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆக்லாந்தில் துணைத் தூதரகத்தை இந்தியா விரைவில் திறக்கும். இந்தியா-நியூசிலாந்து தூதரக உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்தினரை முக்கிய கூட்டாளிகளாக நாங்கள் காண்கிறோம். இந்திய சமூகத்தின் திறன்கள், நிபுணத்துவம், அனுபவம் ஆகியவை இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் மதிப்புமிக்கவை” என்று குறிப்பிட்டார். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் தமது மூன்று நாடுகளின் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்ய திமோர்-லெஸ்டேவுக்குப் புறப்பட்டார்.