வரலாறு காணாத நிலச்சரிவால் புதைந்துத் திணறிக் கொண்டிருக்கிறது வயநாடு. பெரும் பேரிடரின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேதனையைக் கூட்டும் வகையில் வயநாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 10.15 மணியளவில் மலைப்பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் நில அதிர்வை உணர்ந்ததாகவும் மக்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வயநாட்டின் அம்புக்குத்தி மலை, குறிச்சியார் மலை, பிணங்கோடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு அதிகம் உணரப்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தினர், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாணவர்களை பத்திரப்படுத்தியுள்ளனர். மக்களையும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் தோட்ட வேலைகளுக்குச் சென்ற தொழிலாளர்களும் பயத்தில் பாதியிலேயே கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். புவியியல் துறை மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “இன்று காலை 10 முதல் 10:15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மலைப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சில பகுதிகளில் லேசான நில அதிர்வும் உணரப்பட்டது . வீடுகளில் இருந்த பலரும் வெளியே வந்து நின்று கொண்டோம் ” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து தெரிவித்த கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் , “அம்புக்குத்தி மலைப்பகுதியில் இன்று காலை வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்டிருக்கிறது. பல இடங்களிலும் இந்த விசித்திர சத்தத்தை மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், நில அதிர்வு ஏற்பட்டதற்கான எந்த தரவுகளும் பதிவாகவில்லை. நில அதிர்வை துல்லியமாக கண்டறியும் கருவிகள் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. பாதிப்பை உணரும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய முதலமைச்சர் அலுவகத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.