புதுடெல்லி: ‘பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மென்ட் வீக்’ என்ற வடிவேலு வசனம் கூறி, மக்களவையின் பூஜ்ஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த், மத்திய ரயில்வே துறையை கிண்டல் செய்து பேசினார்.
வேலூர் தொகுதி எம்பியான கதிர் ஆனந்த் மக்களவையில் மேலும் பேசியது: “வாணியம்பாடி நியூ டவுன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் நுழைபவர்கள் லெவல் கிராசிங் எல்சி 81 மட்டுமே அணுகக்கூடிய இடமாகும். நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இரு திசைகளிலும் இப்பகுதியை கடக்கின்றன. இதனால், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. அப்போது, இந்த ரயில்வே லெவல் கிராசிங் எல்சி 8-1ன் இருபுறமும் வசிக்கும் மக்கள் இந்த கேட்டை கடந்து செல்கின்றனர். இந்தசமயத்தில், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மிகவும் சிரமப்படுகின்றனர்.
சிலர் இதை மீறி ரயில்வே தண்டவாளம் வழியாக கடக்க முயலும் போது ஏற்படும் விபத்தில் அவ்வப்போது உயிரிழக்கின்றனர். 2019 முதல் வாணியம்பாடியில் எல்சி 81 ரயில்வே கிராசிங்கின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டுவதற்கு நான் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வேலூர் மக்களவை தொகுதியில் லத்தேரி லெவல் கிராசிங் எல்சி 57-ல் ஒரு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
ரங்கம்பேட்டை லெவல் கிராசிங் எல்சி 58-ல் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். காட்பாடி விஐடி கேட் லெவல் கிராசிங் எல்சி 53-ல் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இதே போல் காட்பாடி வஞ்சூர் எல்சி. 129-ல் மேம்பாலம் அமைக்க வேண்டும். லெவல் கிராசிங் உயிர்பலியைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் உடனடியாக அமைந்திட வேண்டும்.
சென்னை ரயில்வே கோட்ட கூட்டத்தில் இது குறித்து பேசிய போது இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். எனவே, வேலூர், காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட், குடியாத்தம் ரயில்வே நிலையங்களில் மக்கள் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.