புதுடெல்லி: மக்களவையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் நிலங்கள், சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ல் வக்பு சட்டம் இயற்றப்பட்டு, 1955-ல் அமலுக்கு வந்தது.
கடந்த 1995-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, வக்பு வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. கடந்த 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, திருத்தம் செய்தது. இதன்படி வக்பு வாரியசொத்துகளுக்கு புவியியல் தகவல் முறைமை(ஜிஐஎஸ்) வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் வக்பு வாரியங்களுக்கு 7.80 லட்சத்துக்கும் மேற்பட்ட அசையாசொத்துகள் உள்ளன. இதன்படி, வாரியங்களிடம் தற்போது 9.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி ஆகும்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. இதன்படி, இந்த வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வாரிய சொத்துகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வக்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
‘‘சட்டப் பிரிவு 30-ஐ மீறும் வகையில் மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று கனிமொழி (திமுக) குற்றம் சாட்டினார். ‘‘புதிய சட்ட மசோதா மூலம் வக்பு வாரிய நிலங்களை பறிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பு சாசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்று அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), வேணுகோபால் (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (என்சிபி-பவார்), ஒவைசி (ஏஐஎம்ஐஎம்) உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
தெலுங்கு தேசம், ஐஜத ஆதரவு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நிறைவாக, அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, ‘‘சச்சார் கமிட்டி பரிந்துரைப்படியே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சாசனத்தை இது மீறவில்லை. வக்பு வாரிய சுதந்திரத்தில் தலையிடவில்லை. பெண்கள் உள்ளிட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாபியா கும்பல்களின் பிடியில் இருந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். புதிய மசோதாவை ஆதரிப்பதாக பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன. எனினும், எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிப்பதால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப அரசு பரிந்துரைக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அமளி: ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பற்றி மாநிலங்களவையில் விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அதற்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி வழங்காததால், அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். அவர்களது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த தன்கரும், அவையில் இருந்து வெளியேறினார்.