புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகியவற்றில் சேர்க்கை பெற நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ம்தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
இதனிடையில், நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தொலைதூர நகரங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க இருக்கிறது.