வயநாடு நிலச்சரிவு: சூச்சிப்பாரா அருவி பகுதியில் நான்கு உடல்கள் மீட்பு

கேரளா: வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வயநாட்டில் உள்ள சூச்சிபாரா அருவிக்கு (Soochipara Waterfalls) அருகில் வனத் துறையினர் நடத்திய சோதனையில், நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்களை மீட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பலத்த மழை கடந்த 29 ஆம் தேதி வெளுத்து வாங்கியது. அப்போது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

இந்நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக மக்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் இறுதிக்கட்ட தேடுதல் பணி நடைபெற்றது. வயநாட்டின் சூரல்மாலா மற்றும் முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 131 பேர் இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து கொண்டனர்.

சூச்சிப்பாரா அருவி வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்காய் மற்றும் அட்டமலை பகுதிகளில் இருந்து அடித்துச் செல்லப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள், அருவியின் ஓரங்களில் உள்ள புதர்கள், மரத்தின் வேர்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றின் மேலடுக்குகளில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், காந்தன்பாறை அருகே பாறைகளில் சடலங்கள் கரை ஒதுங்கியதை தேடுதல் குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வயநாட்டில் உள்ள சூச்சிபாரா அருவிக்கு அருகில் வனத் துறையினர் நடத்திய சோதனையில், நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத் துறையினரின் தகவலின் பேரில் உடல்களை மீட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.