வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்கினைப் பயன்படுத்துவதற்குத் தேவையான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட விடயங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்ற கேள்வி முக்கியமானது அல்ல ஆனால் வாக்காளர் யார் என்ற கேள்வி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முக்கியமானது எனத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி வெற்றி பெறச் செய்பவர். யார் என்பதை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுபவரின் நியாயத்தன்மை, அவர் வெற்றி பெறுவதற்குச் சென்ற விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்றும், தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாகும். அது தொடர்பான அனைத்து சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அதே வழியில் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரமே வாக்களிக்க முடியும் என சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையாளர் நாயகம், தேர்தல் முறைமை ஒன்றின் நேர்மையை ஏற்படுத்தும் முதலாவது இடமாக வாக்காளர் பட்டியல் அமைந்துள்ளதாகவும், அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு வழக்கமான கட்டமைப்பில் பட்டியலை தயாரிக்கிறது எனவும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் பட்டியலை தயாரித்து அதன் பின்னர் தேர்தலை அறிவித்து வெற்றியாளரை அறிவித்த பின்னர் ஒரு வார காலம் வரை தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர் மற்றும் வேட்பாளர் ஆகிய இருவருக்கும் மதிப்பளித்து சட்டத்தை அமுல்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
•