சினிமாவில் சிங்கம் படம் வெளி வந்த பிறகு சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை சிங்கம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பெண் போலீஸ் அதிகாரி என்றால் லேடி சிங்கம் என்று கூறுகின்றனர். அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதையே இருக்கும். யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதே பெரிய சவாலான காரியம். பீகாரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் காம்யா மிஸ்ரா தனது திறமையால் முதல் முயற்சியிலேயே தனது யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார். அவர் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறும் போது வெறும் 22 வயதுதான். தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த காம்யா தனது தந்தைக்கு ஒரே மகளாவார். காம்யா ஆரம்பத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டார். ஆனால் அதன் பிறகு அங்கிருந்து பீகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவர் தனது பணியில் சிறப்பாக செயல்பட்டதால் அவரை பீகார் பெண் சிங்கம் என்று அழைக்க ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் முகேஷ் சஹானியின் தந்தை ஜிதன் சகானி கொலை வழக்கை திறம்பட விசாரித்து அனைவரது பாராட்டையும் பெற்றதோடு கிரிமினல்களுக்கு எதிராக எந்த விதபாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இப்போது தர்பங்கா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக இருக்கும் காம்யா மிஸ்ரா திடீரென தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் தனது 28 வயதில் தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி கடிதமும் கொடுத்துவிட்டார்.
ஆனால் அவரது கடிதத்தை இன்னும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. காம்யா மிஸ்ரா போன்ற திறமையான போலீஸ் அதிகாரிகளை இழக்க விரும்பாத அரசு அவரிடம் ராஜினாமாவை திரும்ப பெறும்படி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் காம்யா மிஸ்ரா தனது தந்தைக்கு ஒரே மகளாவார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது தந்தையின் தொழிலையும், குடும்பத்தையும் கவனிக்க முடிவு செய்துள்ளார். அவரது முடிவு அனைத்து போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த காம்யா அங்கிருந்து கொண்டே தனது யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார். அவர் தனது 12வது வகுப்பு தேர்வில் 98% மதிப்பெண் பெற்று இருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவது கடினம் என்றபோதிலும் காம்யா முதல் முயற்சியில் 172வது இடத்தில் வந்து தேர்ச்சி பெற்றார். காம்யா மிஸ்ராவின் கணவர் அவாதேஷ் சரோஜ் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். அவரும் பீகாரில் தான் பணியாற்றுகிறார். இருவரும் 2019ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88