பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்திருக்கிறது. அதை வென்று கொடுத்திருப்பவர் அமன் ஷெராவத். மல்யுத்த வீரர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றிருக்கிறார். 21 வயதுதான் ஆகிறது. இந்தியாவுக்காக மிகச்சிறிய வயதில் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர் என்ற பி.வி.சிந்துவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் கடந்தும் மல்யுத்தத்தில் கிடைத்திருக்கும் இந்த பதக்கம் இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமானது.
ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கென மல்யுத்தத்தில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இந்தியாவுக்காக முதல் முதலாக தனிநபர் விளையாட்டுகளில் பதக்கம் கிடைத்தது மல்யுத்தம் மூலம்தான். 1952 ஒலிம்பிக்ஸில் கே.டி.ஜாதவ் அந்த பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார். அடுத்து ஒரு தனிநபர் பதக்கத்தை இந்தியா வெல்ல கிட்டத்தட்ட ஒரு அரைநூற்றாண்டு காலம் இந்தியா காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. 1996 ஒலிம்பிக்ஸில் டென்னிஸில் பயஸின் மூலமே அந்த ஏக்கமும் தீர்ந்துபோனது. எனில், கே.டி.ஜாதவ் வென்ற பதக்கத்தின் மதிப்பை நீங்களே அளவிட்டுக் கொள்ளுங்கள். அதேமாதிரி, 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரைக்கும் அத்தனை ஒலிம்பிக்ஸிலுமே மல்யுத்தம் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்திருக்கிறது. 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் அந்த ஒலிம்பிக்ஸ் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியர்கள் அத்தனை பேரின் ஏக்கத்துக்கும் விடிவாக அமைந்தது சாக்ஸி மாலிக் வென்ற பதக்கம்தான்.
சுஷில் குமார், யோகேஷ்வர் தத், சாக்சி மாலிக், ரவிக்குமார் தாஹியா, பஜ்ரங் புனியா என இந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஒவ்வொரு முறையும் இந்தியா தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் பதக்கங்களை வென்று தேசத்தையே பெருமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த முறை வினேஷ் போகத் மூலம் மல்யுத்தத்தில் பதக்கம் கிடைக்கும் என ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலோடு காத்திருந்தது. ஆனால், கிடைத்த பதக்கம் இல்லாமல் போனது. எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் பதக்கத்தைத் தவறவிட்டார். அவரின் வெளியேற்றத்துக்குப் பிறகு அனைவரும் சோர்ந்துவிட்டனர். மல்யுத்தத்தில் இனி பதக்கம் இல்லை என்கிற நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆனால், அமன் ஷெராவத் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த முறை மல்யுத்தத்துக்கு இந்தியா சார்பில் 5 வீராங்கனைகள் சென்றிருந்தனர். ஒரே ஒரு வீரர் மட்டுமே சென்றிருந்தார். அவர் அமன் ஷெராவத். பெரும்பாலான மல்யுத்த வீரர்களை போல அமன் ஷெராவத்தும் ஹரியானாவை சேர்ந்தவர்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து உறவினர்கள் மூலமே வளர்க்கப்பட்டிருக்கிறார். அமன் 11 வயதாக இருந்த போது பெற்றோரை இழந்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே அமனின் தந்தை அவரை சத்ராசல் மல்யுத்த மையத்தில் சேர்த்துவிட்டார். அமனின் பெற்றோருக்கு அவரை மல்யுத்த வீரராக உருவாக்க வேண்டும் என்பதுதான் கனவு. பெற்றோரை இழந்த பிறகு அவர்களின் நினைவுகளோடு அவர்களின் கனவையும் ஏந்திக்கொண்டு சத்ராசலில் மல்யுத்தத்துடனே அவர் வளர்கிறார். சுஷில் குமார்தான் அவரின் இன்ஸ்பிரேஷன்.
சுஷில் குமார், ரவிக்குமார் தாஹியா, பஜ்ரங் புனியா என ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற வீரர்கள் பலரும் சத்ராசலின் மாணவர்கள்தான். ஒலிம்பியன்களை பார்த்து அவர்களுடனேயே வளர்ந்தவருக்கு அவர்களைப் போலவே சாதிக்க வேண்டும் என எண்ணம் ஊறிப்போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
57 கிலோ எடைப்பிரிவில் அமன்ஷெராவத் ரவுண்ட் ஆப் 16 மற்றும் காலிறுதிச்சுற்றிலும் மிகச்சிறப்பாகத்தான் ஆடியிருந்தார். ஆனால், அரையிறுதியில் ஜப்பான் வீரருக்கு எதிராக கோட்டைவிட்டார். எளிதில் வீழ்ந்தார். ஆனாலும் பதக்கம் வெல்வதற்கு இன்னொரு வாய்ப்பு இருந்தது. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பியூர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த டேரியன் என்கிற வீரரை நேர்த்தியாக வீழ்த்தி அசத்தினார்.
பதக்கத்திற்கான போட்டிக்கு முன்பாக வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட சிக்கல் அமனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது முதல் நாளில் ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என மூன்று போட்டிகளையும் ஆடி முடித்த சமயத்தில் அமனின் எடை 61.5 கிலோவாக இருந்திருக்கிறது. அதாவது, அவரது 57 கிலோ எடைப்பிரிவை விட 4.5 கிலோ அதிகமாக இருந்திருக்கிறார். 3 போட்டிகளையும் ஆடி முடித்தவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜிம்மில் ஆஜராகியிருக்கிறார். வினேஷ் போகத்தை போலவே இரவு முழுவதும் உயிரைக் கொடுத்து ஒர்க் அவுட் செய்திருக்கிறார். வினேஷ் 100 கிராம் எடையில் நூலிழையில் தவறவிட்டதை போல நிலைமை ஆகிவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் சிரத்தையோடு உழைத்து ஒரே இரவில் 4.5 கிலோவை குறைத்திருக்கிறார். வலிகள் மறத்துப்போகும் அளவுக்கு உறுதிக்கொண்டிருந்தால் மட்டுமே இதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும். அமனிடம் அந்த உறுதி இருந்தது.
“என்னுடைய அம்மா – அப்பாவுக்கு இந்தப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு ஒலிம்பிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், நான் மல்யுத்த வீரனாக வேண்டும் என ஆசைப்பட்டார்கள்” என உருக்கமாக பேசியிருக்கிறார் அமன். சிறப்பான வெற்றி மூலம் தேசத்தின் மகனாக மாறியிருக்கும் அமனுக்கு வாழ்த்துகள்!