நன்றாகப் பழகியவர்களைக்கூட முகம் சுளிக்க வைத்துவிடும் வாய் துர்நாற்றம். வாய் துர்நாற்றம் பிரச்னை இருக்கிறது என்பதை அந்த நபரிடம் சொல்வதற்கும் யாரும் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. உலக அளவில் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்கின்றன தரவுகள். மருத்துவச் சொற்களில் வாய் துர்நாற்றத்தை ‘ஹலிடோசிஸ்’ (Halitosis) என்கின்றனர்

காரணத்தைக் கண்டறிந்துவிட்டால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிது என்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவைசிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி. “சரியான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணாமல், மவுத் வாஷ், சூயிங் கம் போன்றவற்றைப் பயன்டுத்துவது நிரந்தரத் தீர்வல்ல. மவுத் வாஷில் குறிப்பிட்ட அளவு ஆஹ்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது வாய்ப்பகுதியில் உலர்வு ஏற்பட்டு, துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அஜீரணம்
வயிற்றில் அஜீரணப் பிரச்னை (GERD) இருந்தால் எதுக்களிப்பு தொந்தரவு இருக்கும். எதுக்களிக்கும்போது வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் வாய்ப்பகுதிக்கும் வரும். அந்த நிகழ்வு நடைபெறும் அந்த நொடியே சட்டென்று அந்த அமிலத்தை விழுங்கிவிடுவார்கள். அடிக்கடி வாய்ப்பகுதிக்கு வரும் அமிலம் பற்களையும் பாதித்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

தீர்வு: அஜீரணப் பிரச்னைக்கு மருத்துவரை அணுகி தீர்வு கண்டுவிட்டால், வாய் துர்நாற்றப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
சொத்தைப் பல்:
பல் சொத்தை ஏற்பட்ட இடத்தில் நாம் சாப்பிடும் உணவு சென்று சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சரியான வாய் சுகாதாரதத்தைப் பேணாத நிலையில் சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் உணவுப்பொருளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

தீர்வு: வலி கொடுக்கும் வரை சொத்தைப் பல்லை அலட்சியம் செய்யக்கூடாது. கண்ணாடியில் பார்க்கும்போது சிறிதாக கறுப்புப் புள்ளி போலவோ, கறுப்பு கோடு போலவோ தெரியும்போதே மருத்துவரை அணுக வேண்டும். இதனால் பற்களுக்கும் தீவிர பாதிப்பு ஏற்படாது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கலாம் அல்லது தீர்வு காணலாம்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு பல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் பொதுவானது. பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது ஒருவகையான பல் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். கட்டுப்பாடில்லாத சர்க்கரை, வாய் சுகாதாரம் பேணாத காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

தீர்வு: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காதபோதுதான் பல் பிரச்னைகள் தொடங்கும். எனவே, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே வாய் துர்நாற்றம் தொடங்கி பல் சார்ந்த பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
புகை, மது, குளிர்பானங்கள்
மது, புகைப்பழக்கம் இருப்பவர்களின் ஈறுகள் பாதிக்கப்படும். இதனால் வாய் உலர்வாகி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே போல கார்பனேட்டடு குளிர்பானங்களில் காணப்படும் அமிலத்தன்மை பற்களை பாதிக்கும். மேலும், அதனைக் குடித்தபிறகு வாய் உலர்ந்து துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

தீர்வு: இந்தப் பழக்கங்களை நிறுத்துவதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு. இந்தப் பழக்கங்களை நிறுத்திய பிறகும் வாய்துர்நாற்றம் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
குறட்டை
எய்ம்ஸ் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வில் 10.4 கோடி இந்தியர்களுக்கு குறட்டைப் பிரச்னை (Sleep Apnea) இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. குறட்டைப் பழக்கம் உள்ளவர்கள் தூக்கத்தின்போது வாயைத் திறந்த நிலையில் வைத்திருப்பார்கள். இதனால் வாய் உலர்வாகி துர்நாற்றம் ஏற்படும்.
தீர்வு: மருத்துவரை அணுகி குறட்டைப் பிரச்னைக்குத் தீர்வு கண்டால், வாய் துர்நாற்றத்துக்கும் தீர்வு கிடைக்கும்.
வாய் துர்நாற்றத்துக்கு மிகவும் பொதுவான காரணம் வாய் சுகாதாரத்தைப் பேணாததுதான். தினமும் இரண்டு முறை பிரஷ் செய்து, எட்டு மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்து பராமரித்தால் பிரச்னையைத் தவிர்க்கலாம்” என்றார்.

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.