பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலினம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
33-வது ஒலிம்பிக் தொடர் ஜூலை 25ம் தேதி முதல் தொடங்கி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, போட்டி ஆரம்பித்த 46வது நொடியிலேயே தன்னுடன் மோதும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண் தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் நடுவரிடம் புகார் தெரிவித்துவிட்டு ஆட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதனால் இமானே கெலிஃப்பை ஆட்டத்தில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட, ஏஞ்சலா கரினி உடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து பலரும் இமானே கெலிஃப்பைத் தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வந்தனர். தன் மீதான பாலின சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இறுதிப்போட்டியில் நிச்சயம் வெல்வதாகச் சூளுரைத்திருந்திருந்தார் இமானே.
அந்த வகையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை யாங்க் லியூசை இறுதிப்போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனைப் படைத்திருக்கிறார். அப்போது அரங்கிலிருந்தவர்கள் அல்ஜீரிய கொடிகளை ஏந்தி, கெலிஃபின் பெயரை முழக்கமிட்டனர்.
போட்டியின் இறுதியில் தனது வெற்றி குறித்துப் பேசிய இமானே கெலிஃப், “நான் ஒரு பெண்ணாகவே பிறந்து பெண்ணாகவே வாழ்ந்து வருபவள். இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது என் கனவு. எனது வெற்றியை எதிராளிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என்று தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தங்களின் நாட்டிற்குப் பெருமை சேர்த்த இமானேவிற்கு அந்நாட்டு மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.