ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், தொலைதூர மச்செடி வனப்பகுதியில் ராணுவ ரோந்துக் குழுவினர் மீது தீவிரவாதிகள் கடந்த ஜூலை 8-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஓர் அதிகாரி உட்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் கதுவா மாவட்ட மலைப் பகுதியில் மண் குடிசை ஒன்றில் கடைசியாக காணப்பட்ட இந்த 4 தீவிரவாதிகளின் உருவப் படங்களை ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று வெளியிட்டனர். மேலும் இவர்களைப் பற்றிய தகவலுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளனர்.